சனி, 18 ஜூன், 2011

விரதமிருக்க வைராக்கியம் தேவை பதிவு செய்த நாள்

விரதத்தின்போது உரத்துப் பேசுவது கூடாது; ஆடல் பாடலில் கவனம் செலுத்தக்கூடாது; கும்பலாக உட்கார்ந்து பேசக்கூடாது. விரதத்தின்போது கோயில் கோயிலாகப் போவதில் லாபமில்லை. வெறும் தலைதெறிக்கிற ஓட்டம்தான் அதில் இருக்கிறது. அமைதி குலைகிறது.
‘‘ஒன்றுக்கு இருந்துட்டு வந்துடறேம்ப்பா...’’
‘‘இதை அப்புறம் பார்த்துக்கலாம். சீக்கிரம் வா’’ என்று இழுத்துக்கொண்டு போனால் மனம் முழுவதும் ஒன்றுக்குப் போவதில்தான் இருக்குமே தவிர, வேறு எந்த சிந்தனையும் ஏற்படாது. இது குழுவாக அலைவதில் உண்டான வேதனை.

விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற வைராக்கியம்.

மனம் பாட்டுப்பாட அலையுது வேணாம் பேசாத போ.
மனம் சினிமாவுக்கு போன்னு கேட்குது. வேண்டாம் முடியாதுன்னு சொல்லிடு.மனம் கூடுதலா ரெண்டு கை சர்க்கரைப் பொங்கல் சாப்பிட ஆசைப்படுது.
சாப்பிட்டா, தப்பு வரும். வேணாம் விட்டுடு.
குளித்து, உடம்பை குளிர்வாக்கி சுத்தமாக்கி எங்கேனும் தனியாக அமர்ந்து கொள். சரணம் சொல். ஜபம் செய். உரத்த குரலில் அல்லாமல், முணுமுணுப்பாக அமைதியாக சொல்லலாம். தனித்திருந்து சொல்லலாம். இடையறாது சொல்லலாம். சொல்லிக் கொண்டிருக்கும்போதே மனம் என்ன செய்கிறது, எப்படிச் சொல்கிறது என்று கவனித்து மனதை ஒருமுகப்படுத்த, ஒரே கோட்டில் நிற்கச் செய்கின்ற முயற்சியே விரதத்தின் முக்கிய அங்கம். இதை இடையராது கடைபிடித்தலே வைராக்கியம்.

இப்படிச் சீராக விரதமிருப்பதன் விளைவுகள் என்ன?
நாற்பத்தைந்து நாள் என்பது மிக அற்புதமான விஷயம். உடற் கொதிப்புகள் ஒரு உச்சநிலைக்குப் போய் மெல்ல தாழும். அதேமாதிரி உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மெல்ல அழுத்தி திசை திருப்பி அடக்கி இழுத்துவர நாற்பத்தைந்து நாட்களில் பழகிவிட்டால் ஒரு வருடம் முழுக்க எப்படி இருப்பது என்பதும் நமக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும். ‘தெரியாம பண்ணிட்டேன்’ என்று அபத்தமாக, விரதமிருப்பவர் பேசமாட்டார். முறையாக விரதம் இருப்பவர் மன வலிமை பெற்று விடுகிறார். அந்த வலிமை வருகிறபோது நல்லதும், தீயதுமாக எதிர்ப்படுபவற்றை மிக அழகாக கையாளுகிறார். துக்கத்தை ஏற்றுக்கொள்கிறார். சந்தோஷத்தை மிதமாக அனுபவிக்கிறார். பேச்சில் தெளிவு வருகிறது. தெளிவு நம்பிக்கையாக மாறுகிறது. நம்பிக்கை நாணயத்தை கொடுக்கிறது. நம்பிக்கையும், நாணயஸ்தருமாக ஒரு மனிதர் ஆகும்போது அவருக்கு சுற்றுப்புறத்தில் நல்ல மரியாதை ஏற்படுகிறது. அந்த மரியாதையை தக்க வைத்துக்கொள்ள மேலும் பலமாக விரதமிருக்க, அந்த விரதத்தின் மகிமையில் பல்வேறு சூட்சுமங்கள் வாழ்க்கையைப் பற்றி அவருக்கு தெரிந்து விடுகின்றன.
‘‘அடடே, கோபம் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்குதா! தேவையில்லாத இதுக்குத்தான் பொறாமைப்படறேனா? கேலியில ஆரம்பிச்சு, குத்தல்ல நகர்ந்து, கடைசியில சண்டையில முடியுது. எதுக்கு கேலி?’’ என்று தெளிவாகி விடுகிறார்.

சினிமாவில் வரும் அழகிகளின் அணிவகுப்பில் மனம் லயிக்காது, இந்தப் பெண்மணிகளால் எனக்கு என்ன புண்ணியம் என்ற கேள்வி வரும். அவர்கள் வேறு. நான் வேறு. வெறுமே சந்திப்பதற்குக்கூட எனக்கு விருப்பமில்லை என்ற நிலை ஏற்படும்.
மார்கழியில் மட்டும் விரதமிருக்காமல் மறுபடியும் பங்குனியில் விரதம் இருக்கலாமா, சித்திரையில்
விரதமிருக்கலாமா என்றெல்லாம் மனம் கணக்கு போடும். எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம். எந்தப் பயணமும் மேற்கொள்ள வேண்டாம். பதினைந்து நாள் விரதமிருப்போம். உணவைக் குறைப்போம்; பேச்சைக் குறைப்போம் என்று விரதத்தின் மீது ஈடுபாடு வரும். தீவிரமாக இப்படி முயல்பவருக்கு, இந்த விரத காலத்து குறைவாகப் பேசுதல், குறைவாக உண்ணுதல், குறைவாகத் தூங்குதல்,

குளிர்ச்சியாகக் குளித்தல், இடைவிடாது மந்திர ஜபமோ சரணமோ சொல்லுதல் என்பது வருட முழுவதுக்குமாக ஏற்பட்டுவிடும்.
அதனால் முகத்திலும், உடம்பிலும் பொலிவு கூடும். சுற்றியுள்ளோர் நடுவில் மரியாதை கூடும். விரதத்தின் மகிமையை உணர்ந்து தாங்களும் அதை கடைப்பிடிக்க முயற்சி செய்வார்கள். உங்களிடம் வழிகாட்டச் சொல்லி நிற்பார்கள். இயல்பாக நீங்கள் குருசாமி ஆகிவிடுவீர்கள். பதினெட்டுமுறை மலைக்குப் போனதாலேயே குருசாமி ஆவதல்ல; உள்ளுக்குள்ளே ஒளி கூடியிருப்பதால் ஏற்படுகின்ற தன்மையான குருசாமியாக நீங்கள் மாறுவீர்கள்.

குருவாக இருப்பது என்பது அதிகாரமாக இருப்பதல்ல. அன்போடு இருத்தல். அறிவார்ந்த அன்போடு இருத்தல். ஆவேசம் இல்லாமல் அணுகுதல். அது ஒரு ஆனந்தமான நிலை. விரதம் நிச்சயம் இந்த நிலையைக் கொடுக்கும்.ஒழுங்காக விரதமிருப்பதற்கு நல்ல
வைராக்கியம் தேவை. சாமி பாட்டுகூட கேட்கக்கூடாதா?

அவசியம் என்றால் கேளுங்கள். பாட்டும் இல்லாது விரதமிருங்கள். மனம் எல்லா நேரங்களிலும் ஏதோ பாடிய வண்ணம் சிந்தித்துக் கொண்டிருக்கும். உள்ளேயே பாடிக்கொண்டிருக்கும். இப்படியிருப்பின் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது. பாட்டு, மன ஒருமையை கலைக்கும். மாறி மாறி வெவ்வேறு பாட்டுகளுக்கு போகும். பாட்டிலும் முழு ஈடுபாடு ஏற்படாது. அரை நினைவாய் பாடும். ஏதோ யோசித்தபடி பாடும். எப்போதும் உள்ளே ஒரு பாட்டு சப்தம்
கேட்டுக் கொண்டே இருக்கும். இது ஆரோக்கியமான மனநிலையல்ல.

விரதம், தியானத்திற்கு அழைத்துப் போக
வேண்டும். தியானம், கடவுள் தேடலின், தன்னை அறிதலின் ஆரம்பம். எனவே, விரதம் என்பது மிகமிக மும்முரமான விஷயம். எந்த இளிப்புகளும் அங்கே இல்லை. விரதம் கொண்டாட்டமல்ல; பண்டிகைகள்தான் கொண்டாட்டம்.
நீங்கள் மற்றவர் போல் வாழவில்லை; தனித்த வழியிலே இருக்கிறீர்கள் என்பதை சொல்வதுதான், உங்களுக்கு நினைவுபடுத்துவதுதான் விரதப் பயிற்சி. விரதகால உடையாக கறுப்போ, பச்சையோ, காவியோ உடுத்தச் சொல்கிறார்கள். நான் தனி என்று அறிவுறுத்த, உடையில் காட்டுகிறார்கள். பிறகு, அந்த உடையை கும்மாளம் போட பயன்படுத்தலாமா?
விரதமிருப்பது மிக கம்பீரமான விஷயம். வருடத்தில் நாற்பத்தைந்து நாட்கள் விரத வாழ்க்கை வாழ்வது, மற்ற நாட்களை நிச்சயம் புனிதப்படுத்தும். தெளிவு கொடுக்கும்.

வருடா வருடம் விரதமிருக்க, உங்கள் தன்மை மேம்படும். ஆனால் நாலு நாட்கள் மாலைபோடுவது எந்தவகையிலும் நியாயமில்லை. அது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயல். ‘செய்வன திருந்தச் செய்’ என்பது நல்லோர் வாக்கு.
உங்களை முன்னேற்றப் பாதைக்கு
அழைத்துப்போகாத செயல்களை செய்வதில்
அர்த்தம் என்ன? நேர்மையான விரதம் நிச்சயம் உங்களுக்கு சீர்மையான வாழ்க்கையை கொண்டு வந்து தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக