
இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு முன்னைநாதர் என்றும், இறைவிக்கு வடிவாம்பிகை என்றும் திருநாமங்கள் உள்ளன. இத்தலத்தில் விநாயகர், முருகன், தச அவதார மூர்த்தி, தோஷ்ட கணபதி, தெட்சணா மூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, விஸ்ணு, ஆஞ்சநேயர், நவக்கிரகம், சூரியசந்திரர், வைரவர், சண்டேஸ்வரர் போன்ற பரிவார திருவுருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மற்றும் 63 நாயன்மார்களின் திருவுருவங்கள் மற்றும் உற்சவ மூர்த்திகளின் திருவுருவங்கள் இங்கு காணப்படுகின்றன.
முன்னேஸ்வர வழிபாட்டுத் தலத்தை பலர் வழிபட்ட வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இலங்கையை முன்பு ஆட்சி புரிந்த இராவணனை இராமன் அழித்துவிட்டு செல்லும் போது பிரமகத்தி தோசம் அவரை ஆகாய வழியில் செல்லும் போது பின் தொடர்ந்து கொண்டு சென்றது. இத்தோஷம் நீங்க முன்னேஸ்வரப் பெருமானை தரிசித்ததாக வரலாற்று, மூலமாக அறியக்கூடியதாக உள்ளது. மற்றும் வியாசர், முனிவர்கள், அரசர்களும் இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றுள்ளனர்.
ஜாதி மதம் பாராது கொடியேற்ற நிகழ்ச்சிக்கு சிங்கள, தமிழ் மக்கள் கலந்து கொள்வார்கள். விஷேட பூஜைகள் உட்பட, பக்தர்கள் ஆலயத்திற்கு வழங்கும் பால், செவ்விளநீர் உட்பட பல பூஜைப் பொருட்களை கொண்டு பாலாபிஷேகமும் நடைபெறும். பால் அபிஷேகம் நடைபெறும் போது எல்லோரின் கால்களும் பாலில் நனைவது பக்திப் பரவசத்தை பறைசாற்றுகின்றது எனலாம்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து விஷேட பூஜைகள் உட்பட திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். விஷேட திருவிழாக்களாக 23ம் நாள் தீமிதிப்பாகிய பூமிதிப்பு விழா மாலை 7.00 மணிக்கு நடைபெறும். இதற்காக பல புளியங்கட்டைகள் எரிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் பக்தர்கள் உடைகளில் மஞ்சள் பூசிய வண்ணம் கையில் எழுமிச்சம் பழத்துடன் ‘அரோஹரா...... அரோஹரா......’ என கோஷமிட்டு தீயில் நடமாடுவார்கள்.
அன்று இரவு 63 நாயன்மார்களின் திருவுருவங்களின் வீதிவுலாவும், 24ம் நாளான அன்று பிஷாடனர் உற்சவமும், 25ம் நாள் திருவிழாவான நடேஷர் உற்சவமும், 26ம் நாள் வேட்டைத் திருவிழாவும் இடம்பெறும். 27ம் நாளான திங்கட்கிழமை (2010.08.23) திகதி இரதோற்சவம் (தேர்த்திருவிழா) பல்லாயிரக் கணக்கான மக்கள் புடைசூழ நடைபெறும்.
மறுநாள் 28ம் நாளான (2010.08.24) திகதியன்று தீர்த்த உற்சவம் நடைபெறும். அன்று இரவு இன்னிசை கச்சேரிகளுடன் சுவாமி சிலாபம் வீதியுலாவும் வந்து (26.08.2010) திகதி புதன்கிழமை பூங்காவனம், சண்டேஸ்வரர் பூஜை, வைரவர் மடை போன்ற நிகழ்வுடன் உற்சவம் இனிது நிறைவு பெறும்.
முன்னைநாதர் சமேத வடிவாம்பிகை அம்மனை தரிசிக்க நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இன மத வேறுபாடின்றி பெருந்திரளாக கூடி இறையருளைப் பெறுகின்றனர். இங்கு உற்சவ காலங்களில் பக்தர்கள் நேர்த்தியாக அர்ச்சனைத் தட்டுக்களையும், தென்னங்கன்று போன்றவற்றையும் கொடுத்து வழிபடுகின்றனர். மற்றும் காவடி, செடிக்காவடி போன்றவற்றையும் எடுத்து தமது நேர்த்திக் கடன்களை தீர்க்கின்றனர்.
இவ்வாலய தீர்த்தமானது தெதுறு ஓயா (மாயவனாறு) நதிக்கரையிலே நடைபெறுகின்றது. பெருந்திரளான மக்கள் கூடி தீர்த்த மாடி தங்களது கஷ்டங்கள் துன்பங்களைப் போக்குகின்றனர். தீர்த்தமாடிய பின்னர் சுவாமியை அருகேயுள்ள மடத்தில் வைத்து பொங்கள், அன்னதானம், பூஜை போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும்.
இதன் பின் இரவு வீதியுலாவின் போது மாயிலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், காவடி நடனம், நெருப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும், நாதஸ்வர மேளக் கச்சேரியும் இடம்பெற்று மறு நாட் காலை ஆலயத்தை வந்தடைவது சிறப்பம்சமாகும். இத்தலத்தில் நித்திய, நைமித்திய பூஜைகள் குறைவின்றி ஒழுங்காக நடைபெறுகின்றன. இங்கு பஞ்சரத பவனி, சப்பரமும் சிறப்பிடத்தைப் பெறுகின்றது. பெருந்திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் ‘இரதோற்சவக் காட்சி’ அழகோ அழகு, பக்தர்களின் ‘அரோஹரா.... அரோஹரா....’ ஓசையுடன் தேர் அசைந்து அசைந்து செல்வதை எல்லோரும் இன்புறக் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக