புதன், 28 ஜூலை, 2010

வரலாற்றுப் புகழ்மிக்க ஸ்ரீ முன்னேஸ்வரம்

இலங்கையின் சரித்திரப் பின்னணியோடு இணைந்து மங்காப்புகழ் பெற்று விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் ஆடிமாத உற்சவம் இன்று 28ம் திகதி கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகிறது.இந்நாட்டுக்கு விஜயன் வருகை தருவதற்கு முன்பே ஐந்து பெரும் சிவஸ்தலங்கள் இருந்ததாக வரலாற்று நெறியாளரான சேர் போல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மகா தீர்த்தத்தில் திருக்கேதீஸ்வரமும், சாலவத்தை (சிலாபம்) யில் முன்னேஸ்வரமும், கோட்டையாற்றில் திருக்கோணேஸ்வரமும், கீரிமலையில் நகுலேஸ்வரமும், இருந்ததாக தெரிவிக்கும் வரலாற்று நெறியாளர் ஐந்தாவது சிவஸ்தலம் பற்றி தெரிவிக்காது உள்ளார்.கி.மு. 543ம் ஆண்டு இந்நாட்டுக்கு வருகைத் தந்த விஜயன் இந்நாட்டை முப்பத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளான். இவனது ராஜதானியின் நான்கு வாசல்களிலும் சிறப்புடன் விளங்கிய நான்கு சிவாலயங்களை புனருத்தாரணம் செய்தான் என பழைய இலங்கைச் சரித்திர நூல் (அமெரிக்கன் மிஷன் பதிப்பு) தெரிவிக்கிறது. முன்னேஸ்வரம் ஆலயம் பல்வேறு சிறப்புக்களை கொண்டது.
இதன் தோற்றம் பற்றிய முழுமையான ஆதாரபூர்வமான வரலாற்று நூல் இதுவரை வெளிவரவில்லை. இந்நாட்டின் பழைய சரித்திர சான்றுகளையும், பல்வேறு மொழி நூல்களையும் ஆதாரங்களாக தெரிவித்தே வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள இயலுகின்றது.

4500 ஆண்டுகளுக்கு முன்னர் கடைச் சங்க காலத்தில் தமிழர்கள் முதன்முதலாக இலங்கையில குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர்.
அக்காலத்தில் பாண்டிய அரசனின் கீழ் இலங்கையில் அரசும் இயங்கியுள்ளது. அக்காலத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சி மிகவும் சிறப்புற்று இருந்தது. பாண்டியனின் ஆட்சி கொடியின் சின்னம் மீன் ஆகும். இவ் ஆலயத்தின் கருவறைக்கும் முன்னே உள்ள மகா மண்டபம் கருங் கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பாண்டிய மன்னன் காலத்து கோவில் கட்டுமான கட்டட அம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
மகா மண்டபத்தின் மேல் பகுதியும் தனி கருங்கல்லேயாகும். இக் கல்லில் சதுரமாக செதுக்கப்பட்ட பகுதியில் நான்கு மீன்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டும், மகா மண்டபத்தில் உள்ள கல்தூண்களின் ஓவியங்களைக் கொண்டும் பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.தட்சணக் கைலாச புராணத்திலும், சிவபுராணத்து சனத்குமாரசம்ஹிதையில் அலகேஸ்வரமெனவும், அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றெனவும், தெரிவிக்கப்படுவது முன்னேஸ்வர ஆலயமேயாகும். வியாச முனிவரால் அர்ச்சிக்கப்பட்டதும், இவ் ஆலயத்தின் பொறுப்பில் நாணயம் (குறட்டுக் காசு) வெளியிடப்பட்ட பெருமைக்குரிய ஆலயமாகும். தொன்று தொட்டு குபேர நாடான இலங்கையில் ஸ்ரீ வடிவாம்பிகை சமேத முன்னைநாத சுவாமிகள் எழுத்தருளியிருக்கும் முன்னேஸ்வர ஆலயத்துக்கே உரியதாகும்.
நீண்டதோர் இதிகாச புராண வரலாற்றுடன் இணையப்பட்டுள்ள இவ் ஆலயத்தின் பெருமைகளை சிங்கள இலக்கிய நூலான கோகில சந்தேஷ்ய வெகுவாக தெரிவித்துள்ளது. இலங்கையின் தென்பகுதியான தெவிநுவரையிலிருந்து வட கரைபகுதியான யாழ்ப்பாணம் வரையிலான ஆலயங்களைப் பற்றி இந்நூல் தெரிவிக்கையில் முன்னேஸ்லரம் பற்றி வெகு பெருமையாக விளக்கியுள்ளது.
இராமாயணத்தின் நாயகனான இராமபிரான் சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்து இராவணனுடன் சம்ஹாரம் செய்தப் போது இராமபிரானை பிரமஹத்தி தோஷம் தொத்திக் கொண்டது. அவன் மீண்டும் புஷ்பவிமானத்தில் பாரத நாட்டிற்கு திரும்புகையில் முன்னேஸ்வரத்தை கடக்கும் போது தோஷம் நீங்கியது. உடனே இராமபிரான் முன்னேஸ்வரம் ஆலயம் சென்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூசைகள் நடத்தி சித்திகளைப் பெற்றார் என தட்சிணகைலாச மகாத்மியம் தெரிவிக்கிறது.
பாரதக் கதையோடு முன்னேஸ்வர ஆலயத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாவிட்டாலும் வியாசர் முனிவர் முன்னேஸ்வரத்தில் வழிபட்டதாக தட்சிணகைலாசம் தெரிவிக்கின்றது.

குளக்கோட்டு மகராசனின் பணி:
சோழ நாட்டின் திருவாரூரில் மனுநீதி கண்ட சோழன் வம்சத்தவரான வாமதேவ மகாராஜாவின் புத்திரரான பாலசிருங்க மகாராஜா எனப்படும் குளக்கோட்டு மகாராஜா கலியுகம் 512ல் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகைத் தந்து பல்வேறு திருப்பணிகளை செய்வித்தான். குளக்கோட்டு மன்னன் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தருகையில் மிகவும் பழம் பெருமையை ஆலயம் இழந்து அழிந்து சிதைவடைந்து இருந்துள்ளது. மன்னன் மனம் வெதும்பி திருக்கோவிலை மீண்டும் கட்டுவித்தார்.
சித்தாமிர்த தீர்த்தம், சிவதீர்த்தம், முதலான குளங்களை சுத்தம் செய்து தன்குல குருவாகிய நீலகண்ட சிவாச்சாரியார், அவரது துணைவியார் விசாலாட்சி அம்மையார், அவர்களின புத்திரர்களையும் முன்னேஸ்வரம் வரவழைத்து மற்றும் சோழ நாட்டிலிருந்து பிரமண குருமார்களையும் வரவழைத்து சுபநாளில், சுப முகூர்த்தத்தில் கும்பாபிஷேகத்தையும் நடத்திவைத்தான்.
சோழ நாட்டிலிருந்து ஆலயத்தின் அனைத்து வேலைகளையும் செய்வதற்காக பிராமணர், செட்டி, வோளர், வீரமுட்டி, சங்கமநாதர், கொல்லர், கன்னார், தட்டார், சிற்பர், தச்சர், யாழ்ப்பாடி, எண்ணை வாணிபர், அகம்படியார், முல்லை மடப்பணியார், சங்கு மடப்பணியார், சருகுமடப்பளியார், கைக்கோளர், சேணியர், விறகு வெட்டி, தூதர், நாவிதர், வண்ணர், திமிலர், வலைஞர், குயவர், மறவர், சாணார், கத்திக்காரர் ஆகிய தொழிலாளர்களையும் வரவழைத்தான். இவர்களை கண்காணிக்க தனியுண்ணாப் பூபாலன் என்பவரை அதிகாரி நியமனம் செய்தான். இவனே ஆலய நிர்வாகத்திற்கும் பொறுப்பதிகாரியாக இருந்தான்.

குளக்கோட்டு மன்னன் முன்னேஸ்வர ஆலயத்திற்குரிய பூமியை 64 கிராமங்களாக பிரித்து ஒவ்வொரு கிராமத்துக்கும் இடுகுறி காரணப் பெயர்கள் இட்டான். இக்கிராமங்களில் சோழநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களை குடியிருக்க வைத்தான்.

ஆறாவது பாரக்கிரமபாகு மன்னனது திருப்பணி

ஸ்ரீ பராக்கிரமபாகு எனப்படும் ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் (கி.பி.1410-1462) கி.பி. 1448ம் வருடம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு யாத்திரை மேற்கொண்டான். ஆலயத்தின் இடிந்த பகுதிகளை திருத்தி பல கிராமங்களை மானியங்களாக ஆலயத்திற்கு அளித்தான். இவனது இம் மானியத்தை கல்வெட்டு சாசனமாக செய்வித்தான். இன்னும் இக்கல்வெட்டை ஆலயத்தின் கர்ப்பக்கிருகச் சுவரின் பின்பகுதியில் காணலாம்.
க்கல்வெட்டுச் சாசனம் நிலமட்டத்திலிருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் நான்கு வரிகளாக நாற்பது அடி நீளத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இச் சாசனத்தை இன்றும் ஆலய நிர்வாகம் கவனியாது பாதுகாக்காது உள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும். இதன் மொழி பெயர்ப்பை. 1887ல் ஜி.எம். பெளலர் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

ஒன்பதாவது பராக்கிரமபாகுவின் திருப்பணி

ஒன்பதாவது பராக்கிரம பாகு முன்னேஸ்வர ஆலயம் வந்து கி.பி. 1517ல் இவ் ஆலயத்திற்கு பல கிராமங்களை மானியமாக வழங்கினான். இவன் இக்கிராமங்களை செப்புப் பட்டயத்தில் எழுதிக் கொடுத்ததாக நகுலவம்ச இரண்டாம் பாகம் தெரிவிக்கிறது.

அந்தச் செப்புப் பட்டயத்தில் மன்னம் தெரிவித்திருப்பதாவது,

கலிகால ஸ்ர்வக்ஞ பண்டி பராக்கிரமபாகு மகாராஜா அவர்கள் பரிசுத்த கெளதம புத்த வருடம் 2060 (கலியப்தம் 4519) கி.பி. 1517 இளவரசனுக்கு மின்னலாலுண்டாகிய நோயை நீக்கும் பொருட்டு ஸ்ரீ முன்னேஸ்வர §க்ஷத்திரம் வந்து ஸ்தலத்திலுள்ள ஸ்ரீ மகாவிஷ்ணு மூர்த்தியை வழிபாடு செய்து நோய் நீங்கப் பெற்று கிழக்கெல்லை காவிட்ட குளத்துக்கு பாயும் மல எல் என்ற நீரோட்டத்தையும் தெற்கெல்லை மாதம்பையின் மூன்றுதிக்குகளிலும் நிறுத்தப்பட்ட எல்லைக்கற்களையும் மேற்கெல்லை களுதிய பொக்கணையின் மானமான் தொட்ட என்ற துறையையும் வடக்கெல்லை முன்னேஸ்வரத்துட் பாயும் நீரோட்டத்தையும் உடைய கிராமங்களை தாமிரசாஸனஞ் செய்தார் என தெரிவித்துள்ளான்.

போர்த்துக்கீசரின் அட்டூழியங்கள்:-

கி.பி. 1500ம் ஆண்டின் இறுதியில் இலங்கையை கைப்பற்றிய போர்த்துக் கீசர் முதலில் கரையோரப் பகுதிகளையே அவர்களால் ஆட்சி செய்ய இயன்றது. வியாபார நோக்கமாய் வந்த இவர்கள் தங்கள் மதமாகிய ரோமன் கத்தோலிக்க மதத்தை பலவந்தமாக சிங்களவர்கள், தமிழர்கள் மத்தியில் பரப்பினர். கரையோரப் பகுதிகளை தம் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டதும் இந்து, பெளத்த மத ஆலயங்களை உடைத்து அழித்தனர். பல வந்தமாக மதமாற்றம் செய்தனர். இவ்வாறு செய்த அவர்களின் கொடுமைக்கு முன்னேஸ்வரம் ஆலயமும் பலியானது.

இன்றும் முன்னேஸ்வரம் ஆலயத்தின் கருவறையின் பின் பகுதியான மேற்கு வாசல் பகுதியில் உள்ள சிவலிங்கத்தின் பின் பகுதி உடைந்த நிலையிலேயே உள்ளது. இச் சிவலிங்கத்தின் பின் பகுதி போர்த்துக் கீசராலேயே உடைக்கப்பட்டது. ஆலயத்தின் கட்டடமும் உடைக்கப்பட்டு பெருவாரியான கருங்கல் தூண்கள் போர்த்துக்கீசரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ் ஆலயத்தின் பெறுமதியான சொத்துக்களையும் அவர்கள் கொள்ளையிட்டதாக த கல்கத்தா ரிவ்யூவ் (3-11-1933) நூல் தெரிவிக்கின்றது.

இதேவேளை முன்னேஸ்வரம் ஆலயம் தரை மட்டமாக்கப்பட்டதாக தசிலோன் லிற்றோரியல் – 1593 என்ற நூலில் பி.ஈ.பீரிஸ் தெரிவிக்கிறார். இவர்மட்டுமல்லாது ஈ.ஏ. பெர்னாண்டோ எழுதிய கத்தோலிக்க சிலப்; அருட் தந்தை எஸ். ஞானபிரகாசரின் “ஹிஸ்ட்றி ஒப் கத்தோலிக்” சேர்ச், பி.ஈ.பீரிஸ் எழுதியுள்ள “சிலோன் போர்த்திகீஸ்”, எச். டப்ள்யூவ். கொட்றிங்டன் எழுதிய “ஏ சோர்ட் ஹிஸ்டறி ஒப் சிலோன்” ஆகிய இந்துக்கள் அல்லாத கத்தோலிக்க பெரியார்கள், எழுத்தாளர்கள் எழுதிய நூல்களின் போர்த்தக்கீசரால் முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இன்றும் சிலாபத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலாபம் கடற்கரையில் முகத்துவாரத்துக்கு அண்மித்ததாக சக்தி வாய்ந்த முத்து மாரியம்மன் ஆலயம் இருந்தாகவும், அதை போர்த்துக்கீசர் உடைத்து அழித்து அதன் கட்டடம் தூண்களையும், மரத்தளபாடங்களையும் கிறிஸ்தவ தேவாலய கட்டட பணிகளுக்குப் பாவித்ததாக தெரிவித்து வருகின்றனர்.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் திருப்பணி

கலைகளையும், கல்வியையும் ஆதரித்த கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன். 1747ல் கண்டி மன்னனாக ஆனது பெளத்தர்கள் இவனைக் கண்டுப் பயந்தனர். இந்து மதத்தை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியமையேயாகும். கண்டியில் இவனது ஆட்சியிலேயே விஷ்ணு தேவாலயங்கள் உருவாகின.

இம் மன்னன் போர்த்துக்கீசரால் முன்னேஸ்வரம் ஆலயம் தரைமட்டமாக்கப்பட்ட செய்தி அறிந்து மனம் வெதும்பினான். மதுரையிலிருந்து சிற்பாசாரிகளை வரவழைத்து முன்னேஸ்வரம் ஆலயத்தை மீண்டும் புதுப்பித்தான்.

ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு மீண்டு உயர்கொடுத்தான். 1753ம் ஆண்டு வெகு சிறப்பான வகையில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிநத்தான்.

1753ம் ஆண்டு ஆவணி மாதம் 14ம் திகதி ஆலய குருக்கள் மாருக்கு முப்பதிரண்டு அவண வயல் காணிகளை காணிக்கையாக வழங்கி தாமிரசாசனமும் எழுதிக் கொடுத்தான்.

இவ்வாறு பல்வேறு சிறப்புக்களையும், வடமேல் மாகாணத்தின் முக்கிய இந்து ஆலயமாகவும் விளங்கும் ஸ்ரீவடிவாம்பிகா தேவி- முன்னை நாத சுவாமிகள் எழுத்தருளியிருக்கும் முன்னேஸ்வரம் ஆலயத்தின் ஆடி மாத உற்சவம் ஆரம்பமானதும் முன்னேஸ்வர கிராமமே அழகு மயமாகிவிடும். நாட்டின் பல பகுதிகளிலிமிருந்து பெளத்த இந்து மத பக்தர்கள் கூடிவிடுவர். பல இன மொழி, மதத்தைச் சார்ந்தவர்களின் இணைபாலமாக முன்னேஸ்வரம் திருவிழா காலங்களில் திகழும்.

இருபத் தெட்டு நாட்களைக் கொண்ட ஆடித்திரு விழாவில் தீ மிதிப்பு உற்சவம், பிக்ஷ¡டானர் உற்சவம், நடேசர் உற்சவம், வேட்டைத் திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா, ஆகிய ஆறு திருவிழாக்களே மிகவும் முக்கியமானதாகும்.

தீ மதிப்பு உற்சவம் (19-8-2010)

தீ மிதிப்பு வைபவம் ஆலய மூன்றலில் இடம்பெறும். ஆலயத்தின் மூலஸ்தானத்திலிருந்து விசேட பூசைகள் இடம்பெற்ற பின்னர் காலையில் செந்தணல் கொண்டு வரப்பட்டு ஆலய முன்றலில் காணப்படும் பெரிய மரங்களில் வைக்கப்பட்டு தீ முட்டப்படும் மாலையில் 5 மணியளவில் பக்தர்கள் ஆலய பூசை முடிவடைந்ததும் உள்வீதி, வெளிவீதிகளில் சுற்றி வந்து செந்தணலின் மீது நடந்து தங்களின் பிரார்த்தனையை நிறைவு செய்வர்.

இதன் பின்னர் அறுபத்து மூன்று சிவனடியார்களின் திருவிழா இடம்பெறும். சுவாமி திருவுலா காட்சித் தருகையில் சுவாமியை எதிர்நோக்கியவாறு அறுபத்து மூன்று நாயன் மார்களின் திருவுருவங்களைக் கொண்ட அழகிய இரதம் பின்னோக்கிப் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இலங்கையிலேயே அறுபத்து மூன்று சிவனடியார்களின் விக்கிரகங்கள் முன்னேஸ்வரத்தில் மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிக்ஷ¡டனர் திருவிழா :- (20-08-2010)

பிக்ஷ¡டனர் மூர்த்திக்குக் காலையில் விசேட பூசைகள் இடம்பெற்றபின்னர் மாலையில் கபாலமேந்தி அவிழ்ந்து விட்ட நீண்ட சடை கொண்ட சடாமுடியுடன் திருவிழா காட்சிக் கொடுப்பார். முன்னேஸ்வரத்தில் உள்ள பிக்ஷ¡டனர் மூர்த்தி சுமார் ஐந்தரை அடி உயரத்தை கொண்ட விக்கிரகமாகும்.

நடேசர் திருவிழா (21-08-2010)

காலையில் கூத்தப் பெருமானுக்கு ஆனந்த சபையிலே பூசைகள் இடம்பெறும். மாலையில் கூத்தப் பெருமான் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிக் கொடுப்பார்.

வேட்டைத் திருவிழா (22-08-2010)

மாலையில் சுவாமிகள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்கு வடமேற்கு மூலையில் உள்ள ஐயனார் ஆலயத்துக்கு முன்புறமுள்ள மைதானத்தில் வேட்டையாடும் வைபவம் இடம்பெறும்.

தேர்த் திருவிழா (23-08-2010)

காலையில் வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெறும். இதன் பின்னர் இரதங்களுக்கு சுவாமி, அம்பாள் எழுத்தருள பகல் 1 மணிக்கு ரதோற்சவம் ஆரம்பமாகும். முன்னேஸ்வரம் வெளிவீதி ஊர்வலம் முடிந்து மாலை ஆறுமணிக்கு ரதத்திலிருந்து சுவாமிகள் ஆலயத்திற்கு எழுந்தருளுவார்கள்.

தீர்த்தத்திருவிழா (24-08-2010)

அதி காலையில் விசேட பூசைகள் முடிவடைந்தப் பின்னர் முன்னேஸ்வரம் ஆலயத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள மாயவனாறுக்கு சுவாமிகள் எழுந்தருளுவார்கள். பகல் மாயவனாற்றில் தீர்த்தங் கொடுத்ததன் பின்னர் தீர்த்த திருமடத்துக்கு எழுந்தருளுவார்.

பின்னர் மாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேருக்கு எழுந்தருளி புத்தளம் வீதி வழியாக சிலாபம் கடற்கரைக்கு எழுந்தருளி பின்னர் சிலாபம் பாளம் வீதி, லேக் வீதி, கடைத் தெரு வழியாக மறுநாள் அதிகாலை ஆறு மணிக்கு முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு எழுந்தருளுவார்கள். அதன் பின்னர் காலை ஏழு மணிக்கு விசேட பூசைகள் இடம்பெற்ற பின்னர் துவறா அவரோகணம் நடைபெறுவதுடன் வருடாந்த ஆடி உற்சவம் இனிது முடிவுறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக