
அமாவாசை அன்னாபிஷேகம்
தல வரலாறு: சிவனின் தாண்டவத்தை தரிசித்த பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத மகரிஷி ஆகியோர் அவரது பாதத்தை (உள்ளங்கால்) தரிசிக்க விரும்பினர். பார்வதியின் ஆலோசனைப்படி இங்கு வந்து, மண்ணில் சிவலிங்கம் வடித்து வழிபட்டனர். மகிழ்ந்த சிவன், அவர்கள் முன் தோன்றி நடனமாடி, பாத தரிசனம் காட்டியருளினார். , "பதஞ்சலி மனோகரர்' எனப்பெயரும் பெற்றார். சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.
மூன்று தரிசனம்: மூலஸ்தானத்தில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என ஒரே சன்னதி யில் சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம். திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால் பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். சிவன் மணல் லிங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது.
அமாவாசை அன்னாபிஷேகம்: பொதுவாக சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
கல்விக்கோயில்: இங்கு அருளும் மதுரபாஷினி அம்பிகை, கல்விச்செல்வம் தருபவளாக அருளுகிறாள். இதனால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. இவள், மனிதனுக்கு தேவையான 34 சவுபாக்கியங்களையும் தரும் �க்ஷ�டாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக அருளுகிறாள். அகத்தியர் இவளை, "ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே' என புகழ்ந்து போற்றியுள்ளார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன், இவளைப் பூஜிக்கின்றனர். வாய்பேச முடியாதவர்கள், திக்குவாய் பிரச்னை உள்ளவர்கள் அம்பிகைக்கு தேன் அபிஷேகம் செய்து மனநிம்மதியும், நம்பிக்கையும் பெற வேண்டிக் கொள்கிறார்கள்.
பிரகாரத்தில் கையில் மத்தக மணியுடன் விநாயகர், எட்டு கைகளுடன் துர்க்கை, எம சண்டிகேஸ்வரர், வித்தியாசமான கோலத்தில் மகாலட்சுமி ஆகியோர் அருளுகின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது.
திருவிழா: மார்கழி திருவாதிரை, ஆடிப்பூரம், நவராத்திரி.
திறக்கும் நேரம் : காலை 7.30- 12மணி , மாலை 4.30- 7.30 மணி.
இருப்பிடம்: திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக